1½ வயது குழந்தையை கொலை செய்த தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை

முசிறியில் 1½ வயது குழந்தையை கொலை செய்த தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-02-21 19:13 GMT

முசிறியில் 1½ வயது குழந்தையை கொலை செய்த தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இரட்டை குழந்தை

திருச்சி மாவட்டம் முசிறி சடையப்பன் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவருக்கு லோகநாதன் (வயது 28) என்ற மகனும், சுபாஷினி (26) என்ற மகளும் உள்ளனர். இதில் சுபாஷினி முசிறி ஆமூரை சேர்ந்த முருகையா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சாஞ்சனா ஸ்ரீ (1½), சாதனா ஸ்ரீ (1½) என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தன. சுபாஷினியும் அவரது கணவரும் ஆமூரில் டிபன் கடை நடத்தி வருகின்றனர். சுபாஷினி இரு குழந்தைகளையும் பராமரிக்க சிரமமாக இருந்ததால் சாதனா ஸ்ரீயை முசிறியில் உள்ள தனது தந்தை வீட்டில் விட்டு இருந்தார். மற்றொரு மகளான சாஞ்சானாஸ்ரீயை தன்னுடன் வைத்து சுபாஷினி வளர்த்து வந்தார்.

1½ வயது குழந்தை அடித்துக்கொலை

இந்நிலையில் கடந்த 2018-ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி சுபாஷினி தனது தந்தையின் வீட்டுக்கு வந்த போது லோகநாதனுக்கும், அவரது தந்தை சாமிநாதனுக்கும் இடையே சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதனிடையே சுபாஷினியின் குழந்தை சாதனாஸ்ரீ கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தாள்.

தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த லோகநாதன் தனது தங்கை சுபாஷினியை பார்த்து. `உன் குழந்தையால் தான் இந்த பிரச்சினைக்கு காரணம்' என்று திட்டி விட்டு கட்டிலில் தூங்கி கொண்டிருந்த சாதனாஸ்ரீயை தூக்கி கட்டிலில் அடித்து உள்ளார். இதில் அந்த குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுபாஷினி குழந்தையை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சாதனாஸ்ரீ இறந்தாள்.

ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் தொடர்பாக முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்து செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருச்சி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.செல்வமுத்துகுமாரி, குழந்தையை கொலை செய்த லோகநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் கே.பி. சக்திவேல் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்