வீடு புகுந்து தாய்,மகளை கொன்று நகை கொள்ளை

முட்டத்தில் நகைக்காக தாய், மகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். கொலையாளியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-06-07 17:46 GMT

ராஜாக்கமங்கலம்:

முட்டத்தில் நகைக்காக தாய், மகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். கொலையாளியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாய்-மகள்

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள முட்டம் தூய குழந்தை ஏசு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின் மேரி (வயது 48). இவா்களுக்கு ஆலன் (25), ஆரோன் (19) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஆன்றோ சகாயராஜூம், ஆலனும் துபாயில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். ஆரோன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இதனால் வீட்டில் பவுலின் மேரிக்கு துணையாக, அவருடைய தாயார் திரேசம்மாள் (90) உடன் வசித்து வந்தார். பவுலின் மோி தனது வீட்டில் தையல் வகுப்பும் நடத்தி வந்தார்.

இந்தநிலையில் பவுலின் மேரியும், திரேசம்மாளும் நேற்றுமுன்தினம் இரவு முட்டத்தில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மாலையில் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை வெகுநேரம் ஆகியும் பவுலின் மேரியின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை.

உறவினர்களுக்கு சந்தேகம்

இதனால் உறவினர்கள் பவுலின் மேரியின் செல்போனுக்கு தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் செல்போன் 'சுவிட்ச்ஆப்' செய்யப்பட்டு இருந்தது. எனினும் உறவினர்களுக்கு முதலில் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. அயர்ந்து தூங்கி இருப்பார்கள், என்றே நினைத்துள்ளனர். ஆனால் மதியம் 1 மணி ஆன நிலையிலும் வீடு திறக்கப்படாமலேயே இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் பவுலின் மேரி பெயரை கூறியவாறே வீட்டின் கதவை தட்டினர். இருந்த போதிலும் வீட்டுக்குள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. எனவே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்தனர்.

ரத்த வெள்ளத்தில் பிணங்கள்

அங்கு பவுலின் மேரியும், திரேசம்மாளும் வீட்டின் முன்அறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்களது தலையில் பலத்த காயம் இருந்தது.

இந்த கொடூர காட்சியை பார்த்த உறவினர்கள் உடனே வெள்ளிச்சந்தை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கராமன், கணேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோரும் வந்தனர்.

அவர்கள் பிணமாக கிடந்த 2 பேருடைய உடல்களையும் பார்வையிட்டனர். அப்போது பவுலின் மேரி மற்றும் திரேசம்மாள் ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த நகை மற்றும் காதில் அணிந்திருந்த கம்மல் ஆகியவை மாயமாகி இருந்தது.

நகைகள் கொள்ளை

இதை வைத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் 2 பெண்கள் மட்டும் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து 2 பேரையும் பயங்கர ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்ததோடு அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகையையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

ஆனால் எந்த ஆயுதத்தை கொண்டு 2 பேரையும் தலையில் தாக்கினார்கள்? என்று தெரியவில்லை. 2 பேர் தலையிலும் பலத்த காயங்கள் இருந்தன. இதனால் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை வீடு முழுவதும் போலீசார் தேடினர். அதோடு வீட்டின் வெளிப்புறம் மற்றும் வீட்டை சுற்றிய பகுதிகளிலும் போலீசார் ேதடுதல் வேட்டை நடத்தினர். ஆனாலும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் கிடைக்கவில்லை. இரும்பு கம்பியால் தாக்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

குடும்பத்தினர் அதிர்ச்சி

இதற்கிடையே கைரேகை நிபுணர்களும், மோப்ப நாய் ஏஞ்சலும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் பதிவாகி இருந்த மர்ம ஆசாமியின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேலும் வீட்டில் மோப்பம் பிடித்த மோப்ப நாய் ஏஞ்சல் பல்வேறு இடங்களுக்கு ஓடியது. வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள முட்டம் கடற்கரைக்கும், கலங்கரை விளக்கம் உள்ள பகுதிக்கும் ஏஞ்சல் ஓடியது. அதோடு முட்டம் ஊருக்குள்ளும் சில தெருக்களில் மோப்ப நாய் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இரட்டைக்கொலை குறித்து துபாயில் இருக்கும் ஆன்றோ சகாயராஜ் மற்றும் மூத்த மகனுக்கும், சென்னையில் உள்ள இளைய மகனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமிகளை தேடிவருகின்றனர். நகைக்காக தாய், மகளை அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்