2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை

செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் ராஜபாளையம் அருகே 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2023-05-24 02:09 IST

ராஜபாளையம், 

செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் ராஜபாளையம் அருகே 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செல்போனை உடைத்த கணவர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். வெல்டிங் தொழிலாளியான இவருக்கு ராமுத்தாய் (வயது 30) என்ற மனைவியும், நிஷா(6), அர்ச்சனா தேவி (3) ஆகிய 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். ராமுத்தாய் 100 நாள் திட்ட வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி மாலையில் வேலை முடித்து வீட்டுக்கு வந்த முத்துக்குமார் மனைவியை தேடிய போது ராமுத்தாய் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் ராமுத்தாய் கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கிய முத்துக்குமார் கீழே போட்டு உடைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கிணற்றில் பிணம்

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை தனது குழந்தைகள் நிஷா, அர்ச்சனா தேவி ஆகியோரை அழைத்துக் கொண்டு ராமுத்தாய் வீட்டிலிருந்து வெளியேறினார். குழந்தைகளுடன் வெளியேறிய ராமுத்தாய் இரவில் வீடு திரும்பவில்லை. கணவர் மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அங்குள்ள விவசாய கிணற்றில் ராமுத்தாய், அவரது மகள் நிஷா பிணமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் உறவினர்களுக்கு கூறினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சேத்தூர் போலீசார் தாய்-மகள் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு மகளான 3 வயது குழந்தை அர்ச்சனா தேவி என்ன ஆனார் என தெரியாமல் இருந்தது. இதையடுத்து மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது கிணற்றின் அடியில் அர்ச்சனா தேவி உடல் பிணமாக கிடந்ததை மீட்டனர்.

சோகம்

இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ராமுத்தாய், தனது குழந்தைகள் 2 பேருடன் கிணற்றில்குதித்து தற்கொலை செய்து கொண்டதும், செல்போன் விவகாரத்தில் அவர் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது. தாய் தனது 2 பெண் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்