சொத்து தகராறில் தாய்-மகன் கத்தியால் குத்திக்கொலை
குடவாசல் அருகே சொத்து தகராறில் தாயும், மகனும் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அண்ணன் மற்றும் தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குடவாசல்:-
குடவாசல் அருகே சொத்து தகராறில் தாயும், மகனும் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அண்ணன் மற்றும் தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சொத்து தகராறு
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள செருகளத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது55). இவர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அவருடைய அண்ணன் அதே ஊரை சேர்ந்த ஆரோக்கியதாசுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று அந்த ஊரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆரோக்கியதாசின் மகன்கள் அன்பழகன், ஸ்டீபன் ஆகிய 2 பேரும் கலந்துகொண்டனர். இதே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஸ்கர் மகன் அஜய் (19) என்பவரும் வந்துள்ளார்.
கத்தியால் குத்திக்கொலை
அப்போது ஸ்டீபன், அஜயை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அஜய் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இந்த தகவல் அறிந்து அஜயின் தாய் அலங்காரமேரி (55) அங்கு ஓடி வந்தார். அவரை ஸ்டீபனின் அண்ணன் அன்பழகன் கத்தியால் குத்தினார். இதில் அலங்காரமேரியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஸ்டீபன், அன்பழகன் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.
அண்ணன், தம்பிக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன், அவருடைய தம்பி ஸ்டீபன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். சொத்து தகராறில் தாய்-மகன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.