கொசு ஒழிப்பு மருந்து அடிக்கும் பணி
தர்மபுரி நகரில் டெங்குவை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு மருந்து அடிக்கும் பணியை நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி:
தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் தீவிர டெங்கு ஒழிப்பு பணிக்காக ஒரு வாகனத்தில் வைத்து இயக்கும் பெரிய கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் எந்திரம் மற்றும் 16 சிறிய கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் எந்திரம் ஆகியவை நகராட்சி சார்பில் வாங்கப்பட்டுள்ளது. தர்மபுரி நகராட்சி பகுதியில் இந்த கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியை நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தொடங்கி வைத்தார். ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், சுகாதார அலுவலர் சுசீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த எந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் தெரிவித்தார்.
இதேபோன்று தர்மபுரி நகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாத இடங்களில் குடிநீர் வழங்குவதற்கு வசதியாக 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் லாரி நகராட்சி சார்பில் 15-வது மத்திய நிதி மூலம் வாங்கப்பட்டுள்ளது. இந்த லாரியையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் தொடங்கி வைத்தார்.