நாய் கடித்து 10-க்கும் மேற்பட்டோர் காயம்
குளித்தலை பகுதியில் நாய் கடித்து 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
10 பேர் காயம்
கரூர் மாவட்டம், குளித்தலை நகர பகுதியில் கழுத்தில் பெல்ட் அணிந்த நிலையில் செவளை நிறம் கொண்ட நாய் ஒன்று சுற்றி திரிந்து வருகிறது. இந்த நாய் வீட்டில் வளர்க்கப்படும் நாய் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இது சாலையில் நடந்து செல்பவர்களையும், சைக்கிள் மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்பவர்களை விரட்டி சென்று கடித்துவிட்டு அங்கிருந்து ஓடி விடுகிறதாம்.கடந்த சில நாட்களாக சுமார் 10-க்கும் மேற்பட்டோரை இந்த நாய் கடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை
இந்த நாய் கடித்ததில் குளித்தலை நகர துணை செயலாளர், பள்ளி சிறுவர், சிறுமிகள், வக்கீல், மீன்பிடிக்கும் தொழிலாளி உள்பட பலரை கடித்துள்ளதாம். நாய் கடித்ததில் காயம் அடைந்த சிலர் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது தொடர்பாக நகராட்சி அலுவலர்களுக்கு பலர் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அந்த நாயை பிடிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த நாய்க்கு வெறி பிடித்து விட்டதாகவும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிவதால் அந்த நாயை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.