கருணாநிதிக்கு பிரமாண்ட நினைவு சின்னம் அமைக்கப்படும்

Update: 2022-07-27 17:28 GMT

காரைக்குடி,

சென்னையில் கருணாநிதிக்கு பிரமாண்ட நினைவு சின்னம் அமைக்கப்படும் என அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேசினார்.

கருணாநிதி பிறந்த நாள் விழா

காரைக்குடி பெரியார் சிலை அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா மற்றும் தி.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கினார். முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன் சிறப்புரையாற்றினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கட்சி கொடியேற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சர் பதவியில் அலங்கரித்து பல்வேறு சாதனைகளை பெற்று உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக வாழ்ந்தவர் கருணாநிதி. அவரது பல்வேறு சாதனைகளுக்கு தமிழக மக்கள் 5 முறை முதல்-அமைச்சர் பதவியை வழங்கி அழகு பார்த்தனர்.

பேனா நினைவு சின்னம்

அவரது ஆட்சி காலத்தில் உழவர் சந்தை, மகளிர் சுய உதவி குழு, சமத்துவபுரம், உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை என எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். அவ்வாறு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்த கருணாநிதியின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்கது. அடுத்தாண்டு கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்படும்.

தமிழுக்கு பல்வேறு சிறப்புகளை தந்த கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் சென்னை மெரினாவில் அவரது பேனா நினைவு சின்னத்தை அமைக்க நேற்று முளைத்த கட்சியில் இருந்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவருக்கு சென்னையில் மிகப்பிரமாண்ட நினைவு சின்னம் அமைக்கப்படும்.

சிறப்பாக ஆட்சி

கருணாநிதியின் வழியில் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அவரது முயற்சியால் விரைவில் தமிழகம் தன்னிகரற்ற மாநிலமாக வலுப்பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆனந்த், மாவட்ட பிரதிநிதி சேவியர், கென்னடி நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் சேதுராமன் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்