அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.58 ஆயிரம் மோசடி செய்தவர் கைது
தஞ்சையில், அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். அவர் போலி பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றியது அம்பலமானது.;
தஞ்சாவூர்;
தஞ்சையில், அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். அவர் போலி பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றியது அம்பலமானது.
அரசு வேலை
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள செல்வம் நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர் (வயது 45). இவருக்கு பாலாஜிநகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார். அப்போது உங்களுக்கு தெரிந்தவர் யாரும் இருந்தால் சொல்லுங்கள் அரசு வேலை வாங்கித்தருகிறேன் என கூறி உள்ளார். இதையடுத்து பிரான்சிஸ்சேவியர் தனக்கு தெரிந்த அன்பழகன் என்பவருக்கு வேலை வாங்கித்தருமாறு கூறி உள்ளார். இதையடுத்து ராஜ்குமார், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இரவுக்காவலர் வேலை வாங்கித் தருகிறேன். அதற்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
ரூ.58 ஆயிரம் கொடுத்தார்
இதனை உண்மை என்று நம்பிய பிரான்சிஸ் சேவியர் ரூ.58 ஆயிரத்தை, அன்பழகனிடம் இருந்து வாங்கி ராஜ்குமாரிடம் கொடுத்தார். இதையடுத்து சில நாட்கள் கழித்து ஒரு பணி நியமன ஆணையை பிரான்சிஸ் சேவியரிடம், ராஜ்குமார் கொடுத்துள்ளார்.அந்த பணி நியமன ஆணையை எடுத்துக்கொண்டு அன்பழகன் நுகர் பொருள் வாணிப கழகத்திற்கு சென்றார்.
கைது
இதனை வாங்கி பார்த்த அதிகாரிகள், அது போலி பணி நியமன ஆணை என்று கூறினர். அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த அன்பழகன், பிரான்சிஸ் சேவியரிடம் வந்து பணத்தை வாங்கித்தருமாறு கூறி உள்ளார்.இது குறித்து பிரான்சிஸ் சேவியர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.