லட்சக்கணக்கில் பணம் மோசடி; 2 பேர் கைது
ஆன்லைன் மூலம் கடன் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 42 செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூர்;
ஆன்லைன் மூலம் கடன் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 42 செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தனியார் நிறுவன ஊழியர்
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 46). தனியார் நிறுவன ஊழியரான இவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட ஒருவர், உங்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கடன் கிடைத்துள்ளது. அதற்கான விண்ணப்பத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்புகிறோம். நீங்கள் பூர்த்தி செய்து அனுப்புங்கள் என கூறி அனுப்பி வைத்துள்ளனர். பிரபல தனியார் நிறுவன லோகோவுடன் ஆன்லைன் மூலம் கடன் தருவதாக அதில் தகவல் இடம் பெற்று இருந்துள்ளது.மேலும் சுரேஷிடம் அவருடைய ஆதார் கார்டு, பான்கார்டு, போட்டோ, வங்கி பரிவர்த்தனை விவரங்களையும் கேட்டுள்ளனர். கடன் கிடைக்க வங்கி கணக்கில் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் கடன் கிடைக்கும் என கூறி உள்ளனர். கடன் தொடர்பாக விசாரணைக்காக ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண்கள், ஏ.டி.எம். கார்டின் காலாவதி தேதி, கார்டின் சி.வி.வி. எண் ஆகியவற்றை சொல்லுங்கள் என கூறி உள்ளனர்.
ரூ.25 ஆயிரம் மோசடி
இதனை சுரேஷ் தெரிவித்தவுடன் அவருடைய செல்போன் எண்ணுக்கு இரண்டு முறை ஓ.டி.பி. வந்துள்ளது. அதனை போனில் பேசியவர் கேட்டு வாங்கிக்கொண்டார். சிறிது நேரத்தில் சுரேசின் வங்கி கணக்கில் இருந்து ரூ.24 ஆயிரத்து 955 எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்தது. இதனை பார்த்து சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக சம்பந்தப்பட்ட எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டு ஏன் பணம் எடுத்தீர்கள்? என கேட்டபோது இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
போலீசில் புகார்
இதனால் சந்தேகம் அடைந்த சுரேஷ் இது குறித்து தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க சைபர் கிரைம் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய்குமார், சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு தேவராணி, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
2 பேர் கைது
இந்த தனிப்படையினர் மோசடி செய்தவர்கள் பேசிய செல்போன் எண்ணைக்கொண்டு கண்காணித்தனர். அப்போது அந்த எண்ணில் இருந்து பேசியவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து பேசியது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அரக்கோணம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.அப்போது மோசடியில் ஈடுபட்டது நாகை மாவட்டம் மேலகோட்டைவாசல் நடராஜ தெருவை சேர்ந்த செல்வம் மகன் கார்த்தீசன்(34), சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரை சேர்ந்த முத்துக்குமார் மகன் சுரேஷ்(34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கோபாலகிருஷ்ணனை தேடி வருகிறார்கள்.
42 செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல்
கைதானவர்களிடம் இருந்து 42 செல்போன்கள், 37 சார்ஜர்கள், பயன்படுத்தப்படாத 19 சிம்கார்கள், பயன்பாட்டில் இருந்த 21 சிம்கார்டுகள், வேலையாட்கள் அலுவலக வருகைப்பதிவேடு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்திய விவரங்கள் அடங்கிய 13 நோட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதேபோல் 100-க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தது தெரிய வந்தது.
17 மாவட்டங்களில் புகார்
கைதானவர்கள் மீது தஞ்சை, திண்டுக்கல், தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், கோயம்புத்தூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 புகார்களும், திருப்பூர் மாவட்டத்தில் 4 புகார்களும், மதுரை மாநகரில் 2 புகார்களும், கோவை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, மதுரை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 1 புகாரும் என 17 மாவட்டங்களில் இருந்து 31 புகார்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டுள்ளது.கைதானவர்கள் கொலை மற்றும் பண மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.