காணாமல் போன 10½ பவுன் நகைகள் மீட்பு
மன்னார்குடியில் காணாமல் போன 10½ பவுன் நகைகளை 24 மணிநேரத்தில் மீட்ட போலீசாரை துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
மன்னார்குடி:-
மன்னார்குடியில் காணாமல் ேபான 10½ பவுன் நகைகளை 24 மணிநேரத்தில் மீட்ட போலீசாரை துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
பர்சை தவற விட்ட பெண்
மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூரை சேர்ந்தவர் சதீஷ்துரை. இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி தீபா (வயது 35). தீபாவின் தாய்வீடு மன்னார்குடி அருகே மூவாநல்லூரில் உள்ளது. உறவினர் ஒருவரின் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தீபா நேற்று முன்தினம் மூவாநல்லூர் வந்தார்.
அப்போது பணம் எடுப்பதற்காக அவர் மன்னார்குடி அன்னவாசல் தெருவில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் 10½ பவுன் நகைகள் வைத்திருந்த பர்சை தவற விட்டார்.
நகைகள் மீட்பு
பர்சை தவற விட்டது மூவாநல்லூருக்கு திரும்பி வந்த பின்னர் தான் தீபாவுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பார்த்தபோது நகை வைத்திருந்த பர்சை காணவில்லை.
இதுகுறித்து அவர் மன்னார்குடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஏட்டுகள் கண்ணன், துரைரத்தினம், போலீஸ்காரர் பழனிசாமி ஆகியோர் உடனடியாக அங்கு சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் ஒரு பெண் தீபாவின் பர்சை எடுத்துச்செல்வது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை அடையாளம் கண்டு கொண்ட போலீசார் அவரிடம் சென்று விசாரித்தனர். அப்போது அவர் கீழே கிடந்த பர்ஸ் யாருடையது என்று தெரியாமல் எடுத்து வந்ததாக கூறி, போலீசாரிடம் நகைகள் இருந்த பர்சை ஒப்படைத்து விட்டார்.
பாராட்டு
இதனை அடுத்து மீட்கப்பட்ட நகைகளை மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், தீபாவிடம் நேற்று ஒப்படைத்தார். அப்போது காணாமல் போன 10½ பவுன் நகைகளை உடனடியாக மீட்ட போலீசாரை துணை சூப்பிரண்டு பாராட்டினார்.