அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 27-ந் தேதி புதுக்கோட்டை வருகை
புதுக்கோட்டையில் இளைஞர் அணி மாநில மாநாடு தொடர்பாக ஆலோசனை கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதற்கான செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடக்கிறது.;
இன்று செயல்வீரர்கள் கூட்டம்
சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் அணியினர் பங்கேற்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் வருகிற 27-ந் தேதி புதுக்கோட்டையில் சிப்காட் அருகே இடையப்பட்டியில் ஜல்லிக்கட்டு பாராட்டு விழா நடைபெற்ற இடத்தில் நடைபெற உள்ளது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு புதுக்கோட்டை மாலையீடு அருகில் உள்ள கற்பக விநாயக திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
அமைச்சர்கள் பங்கேற்பு
இதில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இளையராஜா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் கூட்டத்தில் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் தவறாது பங்கேற்குமாறு இளைஞர் அணி அமைப்பாளர்கள் சண்முகம் (வடக்கு), மணிராஜன் (தெற்கு) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.