அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் வருகை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் வருகை தருகிறார்.;
ஆய்வுக்கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவின்படி, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு வருகிறார். அரியலூரில் காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு திட்டப்பணிகள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் பெரம்பலூரில் மாலை 3 மணியளவில் நடைபெற உள்ள ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதைத்ெதாடர்ந்து பெரம்பலூரில் பாலக்கரை அருகே கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் மைதானத்தில் அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொள்கிறார்.
மைதானத்தை பார்வையிட்டார்
இதனை முன்னிட்டு அந்த கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. நேற்று பார்வையிட்டார். அப்போது மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பிரபாகரன் எம்.எல்.ஏ. மற்றும் மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், பரமேஸ்குமார் (பொறியாளர் அணி), மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஹரிபாஸ்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.