சென்னை மண்டலத்தைச் சேர்ந்த கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் - அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்

சென்னை மண்டலத்தைச் சேர்ந்த கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடைகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

Update: 2023-01-12 06:55 GMT

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை வடபழனி முருகன் கோவிலில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த கோவில்களின் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள், சீருடைகளை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கிடும் விதமாக, சென்னை மண்டலத்தை சேர்ந்த பணியாளர்களுக்கு வடபழனி முருகன் கோவிலில் வழங்கப்பட்டது. கோவில்களில் பணிபுரியும் பணியாளர்களின் நலனை காக்கின்ற அரசாக இந்த அரசு திகழ்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி வழங்கியுள்ளதோடு கருணைத் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயன்பெறுகின்றனர். அதேபோல அர்ச்சகர்களின் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தியும், கிராமப்புற பூசாரிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.4 ஆயிரமாக உயர்த்தியும் வழங்கப்பட்டுள்ளது.

கோவில் சார்ந்த பணியாளர்கள் மனமகிழ்ச்சியோடு இருந்தால்தான் பணிகள் சிறப்பாகவும், வருகின்ற பக்தர்களை சிறந்த முறையில் உபசரிப்பதோடு, நிர்வாகமும் நல்ல முறையில் நடைபெறும் என்பதால் அவர்களின் நலன் காக்கின்ற அரசாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது.

மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலிலும், திருத்தணி, சுப்பிரமணியசாமி கோவிலிலும் உண்டியல் எண்ணும் பணி நடைபெறுகின்றது. இப்பணிகள் வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், எவ்வித குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வகையிலும், உண்டியல் எண்ணும் பணியை வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யும் வசதியை தொடங்கி வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர்கள் தனபால், ரேணுகாதேவி, துணை ஆணையர்கள் முல்லை, ஹரிஹரன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்