"பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழிலும் மந்திரம் ஒலிக்கும்" அமைச்சர் சேகர்பாபு பேட்டி

“பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது தமிழிலும் மந்திரம் ஒலிக்கும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Update: 2023-01-20 22:19 GMT

பழனி,

புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை பழனிக்கு வந்தார். பின்னர் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு நடந்து சென்று கும்பாபிஷேக பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதற்கிடையே உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியும் மலைக்கோவிலுக்கு சென்றார்.

வி.ஐ.பி. பாஸ்

தொடர்ந்து மலைக்கோவிலில் யாகசாலை அமைக்கப்படும் இடங்கள், தங்ககோபுரம், பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் அமர உள்ள இடம் ஆகியவற்றை அமைச்சர்கள் பார்வையிட்டனர். பின்னர் முருகன் கோவிலில் அமைச்சர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக வேள்விக்காக 90 குண்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில் முருகப்பெருமானுக்கு மட்டும் 33 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கும்பாபிஷேகத்தை காண 6 ஆயிரம் பேருக்கு வி.ஐ.பி. பாஸ் வழங்கப்பட உள்ளது.

பக்தர்களின் நலனுக்காக 4 தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் மந்திரம் ஒலிக்கும்

பின்னர் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என்ற சர்ச்சை உள்ளதே? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து கூறுகையில், பழனி கோவில் அறங்காவலர் குழுவினரும் இதுபற்றி வலியுறுத்தினர். ஆகம விதிகளுக்கு உட்பட்டு கும்பாபிஷேக வேள்விகள் நடத்தப்படும் என துறை அமைச்சர் சார்பில் அறிவித்தேன். எனவே இந்த கும்பாபிஷேகத்தில் தமிழிலும் மந்திரம் ஒலிக்கும். கும்பாபிஷேகத்தை காண ஆன்லைனில் 47 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதில் 2 ஆயிரம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய இருக்கிறோம்.

மேலும் பழனி கோவில் கும்பாபிஷேகத்தை காண அடிவார பகுதியில் 16 இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட உள்ளன என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்