டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் அமைச்சர் வேண்டுகோள்

டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை மட்டுமே பொதுமக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.;

Update:2023-03-08 05:00 IST

சென்னை,

மக்கள் மருந்தக தினம்-2023-ஐ முன்னிட்டு, சென்னை எழும்பூர் அரசு குடும்பநல பயிற்சி மையத்தில், சிறப்பாக சேவைபுரிந்த மக்கள் மருந்தக பணியாளர்களை பாராட்டி கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.கேடயங்களை வழங்கி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

மார்ச் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை மக்கள் மருந்தக தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு மக்கள் மருந்தகம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 620 மக்கள் மருந்தகங்கள் உள்ளன. சென்னையில் மட்டும் 72 மருந்தகங்களும், மற்ற மாவட்டங்களில் 548 மருந்தகங்களும் செயல்படுகின்றன. நாள்பட்ட நோய்களான நீரிழிவு, இதய-ரத்தநாள நோய், புற்றுநோய்க்கான மருந்துகள், ஒவ்வாமை மருந்துகள் போன்றவை மக்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன.

டாக்டர் பரிந்துரை

டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் தாமாக மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதால் பல உடல்நல பிரச்சினைகள் ஏற்படும். எனவே பொதுமக்கள் டாக்டரின் பரிந்துரையின்பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். விலை உயர்ந்த மருந்துகளுடன் ஒப்பிட்டால் மக்கள் மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை விலை குறைவாக கிடைக்கின்றன. மொத்தம் ஆயிரத்து 759 மருந்துகளும், 280 அறுவைசிகிச்சை சாதனங்களும், தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள உயிர்காக்கும் மருந்துகளும் இங்கு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் சில்பா பிரபாகர் சதீஷ், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனர் லால்வீனா, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்