தூய்மை பணியாளர் குடும்பத்தினருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல்

உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி தற்கொலை செய்த சுடலைமாடன் குடும்பத்திற்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

Update: 2023-03-25 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி தற்கொலை செய்த சுடலைமாடன் குடும்பத்திற்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

தூய்மை பணியாளர் தற்கொலை

உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிய சுடலைமாடனிடம் அவரது பதவி உயர்வு, சாதி குறித்து முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா கல்லாசி, பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் அவதூறாகப் பேசினார்களாம். இதையடுத்து 17-ந் தேதி விஷம் குடித்த சுடலைமாடன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 23-ந் தேதி உயிரிழந்தார்.

சுடலைமாடனின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் வந்து கொடுத்த உறுதிமொழியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் சுடலைமாடன் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் அரசு உதவி, அவரது மகளுக்கு அரசு வேலை, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் சுடலை மாடன் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்று அடக்கம் செய்தனர்.

அமைச்சர் ஆறுதல்

இந்நிலையில் நேற்று சுடலைமாடன் குடும்பத்தினரை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தமிழக தூய்மைப் பணியாளர் ஆணைய துணைத்தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் உதவி வழங்கினார்.

நெல்லை, தூத்துக்குடி பேரூராட்சி உதவி இயக்குனர் கண்ணன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், முக்காணி கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால் ராஜேஷ், பேரூராட்சி உறுப்பினர்கள் மும்தாஜ்பேகம், அன்புராணி, ஆபித், பிரதீப் கண்ணன், பஷீர், சரஸ்வதி பங்காளன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் மகாவிஷ்ணு, ரவிராஜா, மாவட்ட பிரதிநிதி ஜெயப்பிரகாஷ், ஒன்றிய செயலர்கள் ரமேஷ், நவீன்குமார், சதீஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய், கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்