உயர்கல்வி முடித்த மாணவ, மாணவிகள்போட்டி தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும்அமைச்சர் காந்தி அறிவுரை

Update: 2023-04-26 19:00 GMT

உயர்கல்வி முடித்த மாணவ, மாணவிகள் போட்டி தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்று அமைச்சர் காந்தி அறிவுரை வழங்கினார்.

புதிய ரேஷன் கடைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி தாலுகாவில் 5 புதிய ரேஷன் கடைகளும், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ரூ.1 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறை கட்டிடங்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.36 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் அறுவை அரங்கு, எக்ஸ்ரே மையம், சி.டி.ஸ்கேன் மையம் ஆகியவை திறப்பு விழா நேற்று நடந்தது.

இந்த விழாக்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. மற்றும் கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு புதிய ரேஷன் கடைகள், வகுப்பறை கட்டிடங்கள், அறுவை சிகிச்சை அரங்கு, எக்ஸ்ரே மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும் ரூ.50 லட்சம் மதிப்பில் காசநோய் கண்டறியும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட நடமாடும் ஊர்தி மற்றும் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இந்தியன் வங்கி கிளையின் புதிய கிளையை அமைச்சர் திறந்து வைத்தார்.

விழாவில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-

5 ரேஷன் கடைகள்

பர்கூர் வட்டம், பாலிநாயனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட அழகியபுதூர் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை, காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் குடிமேனஅள்ளி ஊராட்சியில் முழுநேர ரேஷன்கடை, மிட்டஅள்ளி ஊராட்சியில் தொட்டிப்பள்ளம் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை, ராயக்கோட்டை ஊராட்சி ரஹமத் காலனி மற்றும் எடவன அள்ளி ஊராட்சிகளில் முழுநேர ரேஷன் கடை என மொத்தம் 3 முழுநேர ரேஷன் கடைகளும், 2 பகுதிநேர ரேஷன் கடைகள் என மொத்தம் 5 ரேஷன் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த ரேஷன் கடையில் எவ்வித சிரமுமின்றி பொருட்களை வாங்கி பயன்பெற்று கொள்ளலாம்.

போட்டி தேர்வு

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தன்னிறைவு திட்டம் 2019-2020-ன் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் 5 வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் மூலம் ரூ.50 லட்சம் பங்களிப்பாகவும், ரூ.50 லட்சம் அரசு நிதி என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பில் 5 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை, எம்.பில் உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

வகுப்பறைகள் பற்றாக்குறையின் காரணத்திற்காக இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் இக்கல்லூரியில் உயர்கல்வித் துறை சார்பாக ரூ.3 கோடியே 64 லட்சம் மதிப்பில் 9 அறிவியல் ஆய்வக கட்டிடங்களுக்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, மாணவ, மாணவிகள் உயர்கல்வியை முடித்து பல்வேறு போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும்.

கட்டமைப்பு வசதிகள்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, ரூ.36 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் அறுவை அரங்கும், எக்ஸ்ரே மையமும், கிருஷ்ணகிரி நகரில் உள்ள மருத்துவமனையில் இயங்கி வந்த சி.டி. ஸ்கேன் மையம் நோயாளிகளுக்கு உயர் சிகிச்சை வழங்கும் பொருட்டு தற்போது .புதியதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.50 லட்சம் மதிப்பில் அதிநவீன காசநோய் கண்டறியும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட நடமாடும் ஊர்த்தி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்தியன் வங்கியின் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம், துணைப்பதிவாளர் குமார், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, இந்தியன் வங்கி மண்டல பொதுமேலாளர் பழனிகுமார், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் கோவிந்தராசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்