தி.மு.க வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கூட்டம்

காங்கயம் அருகே நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

Update: 2023-09-22 17:21 GMT

காங்கயம் அருகே நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

காங்கயம் அருகே நாளை (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதையொட்டி நேற்று தமிழ்வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தாா்.அப்போது அவா் கூறியதாவது:-

ஏற்பாடுகள் தயார்

திருப்பூா் தி.மு.க தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கயம் அருகே உள்ள படியூாில் தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறாா். கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணிகள், வாகன நிறுத்தங்கள் தயாா் செய்யும் பணிகள், உணவு கூடம் அமைத்தல் என அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.

மேலும் இங்கு வரும் கட்சி பொறுப்பாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித இடையூறும் நேராத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் பன்முக தன்மை சிதைக்கப்பட்டு, ஜனநாயகம் சீா்குலைக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் அதை எதிா் கொண்டு எவ்வாறு நாம் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆலோசனை கூட்டமாக இந்த கூட்டம் இருக்கும்.

3-ம் கட்ட கூட்டம்

ஒரு வாக்குச்சாவடி பொறுப்பாளா், கழக பொறுப்பாளராக இருந்து வாக்காளா் பட்டியலை சாிபாா்ப்பதோடு, அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். அரசு செயல்படுத்தும் திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் உறவு பாலமாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும். தி.மு.க. சாா்பில் திருச்சியில் முதல் கட்டமாகவும், ராமநாதபுரத்தில் 2-ம் கட்டமாகவும் வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கூட்டம் முடிக்கப்பட்டுவிட்டது. தற்போது நாளை 3-ம் கட்டமாக மேற்கு மண்டல பொறுப்பாளா்களுக்கான கூட்டம் இங்கு நடைபெற உள்ளது.

கூட்டத்தில் 14 கழக மாவட்டங்களில் இருந்து 14 ஆயிரத்து 411 வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கலந்து கொள்கின்றனா். அதாவது 50 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் இதில் கலந்துகொள்கின்றனா். அவா்களோடு அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், தலைமை பொதுக்குழு, செயற்குழு உறுப்பினா்கள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்து கொள்ள உள்ளனா்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாலை 4 மணிக்கு தி.மு.க தலைவா் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறாா். அப்போது வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். சமூக ஊடகங்களில் பரவும் நமக்கு எதிரான செய்திகளை எவ்வாறு எதிா்கொள்ள வேண்டும். உண்மை செய்திகளை மக்களிடம் எவ்வாறு கொண்டு சோ்க்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளாா்.

இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருப்பூா் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூா், கிளைக்கழக நிா்வாகிகள் செய்துள்ளனா்.

இவ்வாறு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.

பேட்டியின்போது திருப்பூா் தெற்கு மாவட்ட கழக செயலாளா் இல.பத்மநாபன் உடன் இருந்தாா். 

Tags:    

மேலும் செய்திகள்