கொடைக்கானலில் மினி மாரத்தான் போட்டி

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Update: 2022-06-01 15:37 GMT

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நட்சத்திர ஏரி பகுதியில் இன்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 2 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டனர்.

ஆண்கள் பிரிவில் பொள்ளாச்சி சேத்துமடை அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜன் முதலிடம் பிடித்தார். நத்தம் தனியார் அகாடமியை சேர்ந்த ராகவ் 2-ம் இடமும், விவேகானந்தன் 3-ம் இடமும் பிடித்தனர். இதேபோல் பெண்கள் பிரிவில் கொடைக்கானல் தனியார் பள்ளி மாணவி திரிஷா முதல் இடம் பிடித்தார். நத்தம் தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவி நேகா 2-ம் இடம் பிடித்து அசத்தினார். கொடைக்கானல் தனியார் பள்ளி மாணவி கிருத்திகா 3-ம் இடம் பிடித்தார்.

இதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா பிரையண்ட் பூங்காவில் நடைபெற்றது. இதில் கொடைக்கானல் ஆர்.டி.ஓ. முருகேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். அப்போது பெண்கள் பிரிவில் 2-ம் இடம் பிடித்த மாணவி நேகாவை அதிகாரிகள் பாராட்டினர். இந்த விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா, மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவராஜ், தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிஜூகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்