மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தினை உணவகங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சுயஉதவி குழுக்களினால் இயக்கப்படும் தினை உணவகங்கள், ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.;
சென்னை,
மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (திசா) 3-வது மாநில கூட்டம், சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-
இந்த ஆண்டில் 10 ஆயிரம் புதிய சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கவும், ஊக்குனர் மற்றும் பிரதிநிதிகளுக்கும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் அலுவலக நிர்வாகிகளுக்கும், ஆளுமை மற்றும் நிதிமேலாண்மை குறித்த புத்தாக்க பயிற்சி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக கடந்த ஆண்டில் நடைபெற்ற கண்காட்சிகளில் 3,528 சுயஉதவி குழுக்கள் ரூ.3.75 கோடி அளவில் விற்பனை செய்துள்ளனர்.
இலக்கை தாண்டி...
மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் 137 விற்பனை அங்காடி அமைக்கப்பட்டு சுயஉதவி குழு தயாரிப்புகளை ஒருங்கிணைத்து விற்பனை செய்யப்படுவதுடன், முறையான பேக்கிங் மற்றும் தயாரிப்புகளை தரப்படுத்துவதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு மதி வணிக முத்திரை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சுயஉதவி குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்க ரூ.25 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதையும் தாண்டி 25 ஆயிரத்து 642 கோடி ரூபாய், 4 லட்சத்து 49 ஆயிரத்து 209 சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கி அரசு சாதனை புரிந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.45 ஆயிரம் கோடியையும் தாண்டி, 47 ஆயிரத்து 34 கோடி ரூபாய் வழங்கி சாதனை புரிந்துள்ளோம்.
இந்த ஆண்டு வங்கிக்கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.30 ஆயிரம் கோடியில் கடந்த ஜூன் வரை, சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5,644 கோடி வங்கிக்கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, பல்வேறு புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதி தினை உணவகங்கள்
சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மதி சந்தை என்ற இணையவழி விற்பனை தளத்தை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், சுயஉதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை அவர்களுக்கு உள்ளாகவும், பிற பெரும் வணிக நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்வதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு நடத்தப்படும்.
மகளிர் சுயஉதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் முக்கிய சுற்றுலாத் தளங்களில் மதி அங்காடிகள் நிறுவப்படுவதுடன், சிறப்பு சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. மேலும் சுயஉதவி குழுக்களால் இயக்கப்படும் மதி தினை உணவகங்கள், ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளன.
சத்துணவு திட்ட பயனாளிகள்
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் நடப்பாண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன சுயஉதவி குழு உறுப்பினர்களை பயிற்றுவித்து, அவர்களின் பங்கேற்பின் மூலம், தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மன் - சத்துணவு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில், 46 லட்சத்து 70 ஆயிரத்து 458 மாணவர்கள் பயனடைந்து உள்ளனர்.
வேளாண்மை, உழவர் நலத்துறையின் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் எண்ணிக்கை 284. இதில் 2021-ம் ஆண்டுவரை முதல் கட்டமாக, 63 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இணைக்கப்பட்டன. 2021-22-ம் ஆண்டில் 2-ம் கட்டமாக 64 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும், 2023-ம் ஆண்டில் 3-ம் கட்டமாக 30 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பங்கேற்றோர்
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சாத்தூர் ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழனிமாணிக்கம், ஆ.ராசா, திருநாவுக்கரசர், தொல். திருமாவளவன், நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், எழிலன்,
அசன் மவுலானா, செங்கோட்டையன், தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச்செயலாளர் செந்தில்குமார் மற்றும் உயர் அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.