புலம் பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

புலம் பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-21 20:25 GMT

கொரோனா பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டு வேலை இழந்து நாடு திரும்பிய புலம் பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன் தமிழ்நாடு அரசு "புலம் பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்" எனும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம். அவர்கள் கொரோனா பெருந்தொற்று பரவலினால் 1.1.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பி இருக்க வேண்டும். குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18-க்கு மேலாகவும், 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். வணிக மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சமாகவும், உற்பத்தி தொழில் திட்டங்களுக்கு ரூ.15 லட்சமாகவும் இருக்கும். பயனாளர் தம் பங்களிப்பாக, பொது பிரிவு பயனாளர்கள் திட்ட தொகையில் 10 சதவீதமும், பெண்கள், இட ஒதுக்கீடு பிரிவினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும். அரசு திட்ட தொகையில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.2½ லட்சம் என வழங்கும் மானியம் 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, பின்னர் கடனுக்கு சரிக்கட்டப்படும். கடன் வழங்கப்பட்ட 6 மாதங்கள் கழித்து 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்தப்பட வேண்டும். இத்திட்டம் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தின் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். எனவே வெளிநாடுகளில் இருந்து கொரோனா பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மேற்குறிப்பிட்டுள்ள தகுதி மற்றும் ஆர்வம் உடையோர் தம் வாழ்வாதாரத்திற்கான தொழில் தொடங்க இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04328-225580 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 8925533978 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்