குேடான்களில் நள்ளிரவில் தீ விபத்து; ரூ.1¼ கோடி கருவாடுகள் எரிந்து நாசம்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள குடோன்களில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1¼ கோடி மதிப்பிலான கருவாடுகள் எரிந்து நாசமானது.

Update: 2022-07-23 19:51 GMT

மலைக்கோட்டை, ஜூலை.24-

திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள குடோன்களில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1¼ கோடி மதிப்பிலான கருவாடுகள் எரிந்து நாசமானது.

தீ விபத்து

திருச்சி காந்தி மார்க்கெட் கீழபுலிவார்டு சாலை பகுதியில் மூங்கில் கடைகள் மற்றும் கருவாட்டு குடோன்கள் உள்ளன. இதில் முகமது இக்பால் (வயது 42), அப்துல் கரீம் (62), ஆகியோரின் குடோன்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்த குடோன்களுக்கு நடுவில் கருவாடுகளை தரம் பிரிப்பதற்கு வசதியாக கீற்றுக்கொட்டகை போடப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடிந்ததும் ஊழியர்கள் குடோனை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் கீற்றுக்கொட்டகையில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் உள்ள தொழிலாளர்கள், இதுபற்றி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

3 மணி நேர போராட்டம்

அதன் பேரில் நிலைய அலுவலர் மெல்கியுராஜா தலைமையிலான வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் கீற்றுக்கொட்டகையில் பிடித்த தீ, மளமளவென அருகில் இருந்த குடோன்களுக்கும் பரவியது. குடோன்களில் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கருவாடுகள் பற்றி எரிந்தன. தீ வேகமாக பரவியதை கண்ட தீயணைப்பு வீரர்கள் மேலும் 2 தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதையடுத்து ஸ்ரீரங்கத்தில் இருந்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. 5 வாகனங்களை பயன்படுத்தி சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது.

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கருவாடுகள்

இந்த தீ விபத்தில் முகமது இக்பால் குடோனில் இருந்த 40 டன் கருவாடுகள், அப்துல் சமது குடோனில் இருந்த 15 டன் கருவாடுகள் என மொத்தம் ரூ.1¼ கோடி மதிப்பிலான கருவாடுகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. தீப்பிடிக்காத இடத்தில் இருந்த கருவாடுகள் அனைத்தும் தண்ணீர் பீய்ச்சி அடித்ததில் நனைந்து நாசமாகி விட்டது. இந்த தீ விபத்தில் சேதமடைந்த கருவாடுகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கீற்றுக்கொட்டகைக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்து சென்றனரா? அல்லது புகைத்து விட்டு வீசப்பட்ட சிகரெட், பீடி துண்டுகள் மூலம் தீ பற்றியதா? என்று தெரியவில்லை. இது குறித்து உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்