சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலை மீது 'பெயிண்ட்' ஊற்றி அவமதிப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலை மீது ‘பெயிண்ட்’ ஊற்றி அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2023-08-03 02:20 IST

சென்னை வண்ணாரப்பேட்டை காலிங்கராயன் மெயின் தெரு அண்ணா திருமண மண்டபம் அருகில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை உள்ளது. கடந்த 1994-ம் ஆண்டு இந்த சிலை திறக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை எம்.ஜி.ஆர். சிலையின் முகத்தில் யாரோ சிவப்பு நிற 'பெயிண்ட்' ஊற்றி சென்று உள்ளனர்.

எம்.ஜி.ஆர். சிலை அவமதிப்பு செய்யப்பட்ட தகவல் பரவியதையடுத்து ஏராளமான அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி ராயபுரம் பகுதி செயலாளர் ஏ.டி.அரசு, வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

அதில் மர்மநபர் ஒருவர் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றிய காட்சி பதிவாகி இருந்தது. அந்த நபர் யார் என்று போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது அந்த நபரை பற்றிய விவரம் தெரியவந்தது.

சிலையை அவமதிப்பு செய்தவர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மாடன் லைன் 2-வது தெருவைச் சேர்ந்த லியோ நார்ட் (வயது 43) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

இதற்கிடையே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர். சிலை மீது இருந்த சிவப்பு நிற பெயிண்டை சுத்தம் செய்து, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதற்காக, தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் மக்களுக்காகவே அர்ப்பணித்து, அனைவருடைய இதயங்களிலும் அ.தி.மு.க. நிறுவன தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நீங்கா இடம்பெற்றிருக்கிறார். வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம் ராயபுரம் பகுதி 51-வது வட்டம் காலிங்கராயன் தெருவில் 1994-ம் ஆண்டு நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர். உருவச்சிலையின் மீது நேற்று (நேற்று முன்தினம்) நள்ளிரவு, விஷமிகள் பெயிண்டை ஊற்றி உள்ளனர். இந்த செயல் மிகுந்த கண்டனத்துக்கு உரியதாகும். மேலும் இந்த நிகழ்வு கோடான கோடி கட்சி தொண்டர்களின் மனதை வேதனை அடைய செய்துள்ளது. மக்கள் அனைவராலும் போற்றி வணங்கப்பட்டு வரும் எம்.ஜி.ஆர். சிலையின் மீது பெயிண்ட் ஊற்றிய கயவர்களை உடனடியாக கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலனை காப்பதிலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தாமல், தனது குடும்பத்தை வளப்படுத்துவதிலேயே முழு நேரத்தையும் செலவிட்டு வருவது நாடறிந்த உண்மை.

முதல்-அமைச்சர் பொறுப்பில் உள்ள காவல்துறை, எம்.ஜி.ஆர். சிலையின் மீது, பெயிண்ட் ஊற்றிய கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, இதன் பின்னணியில் யார்? யார்? உள்ளனர் என்பதை கண்டுபிடித்து, அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்