எம்.ஜி.ஆர். குறித்து நாகரிகமற்ற முறையில் பேசியுள்ள ஆ. ராசாவுக்கு கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்
வருகின்ற தேர்தலில் இதற்கான விளைவுகளை தி.மு.க.வும், ஆ. ராசாவும் சந்திக்க நேரிடும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு முழுக் காரணமாக விளங்கியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். "முகத்தை காட்டினால் முப்பது இலட்சம் வாக்குகள் கிடைக்கும்" என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர் எம்.ஜி.ஆர். கட்சிக் கணக்கு கேட்டதற்காக கட்சியை விட்டு நீக்கி "பால் குடித்த வீட்டிற்கு பாதகம்" செய்த தீயசக்திகளை அகற்றி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை தமிழ்நாட்டில் அமைத்து, மக்களுக்கு பொற்கால ஆட்சியை வழங்கியவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு வெளியேற்றியதன் விளைவு, அவர் உயிரோடு இருக்கும் வரை தி.மு.க.வால் ஆட்சிப் பொறுப்பிற்கு வர முடியவில்லை. இதற்குக் காரணம் மக்கள் அவர்மீது வைத்திருந்த அளவற்ற அன்புதான்.
"தங்கத்தை மண்ணில் இருந்து தோண்டி எடுப்பார்கள். இப்போது மண்ணை தோண்டி தங்கத்தைப் புதைக்கிறார்கள்" என்று எம்.ஜி.ஆர். மறைவின்போது வருணனை செய்யப்பட்டது. அந்த அளவுக்கு, மக்களை ஈர்க்கும் காந்த சக்தியை படைத்ததால்தான், மண்ணைவிட்டு மறைந்து பல ஆண்டுகள் கடந்தும், மக்களின் நெஞ்சங்களில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார் எம்.ஜி.ஆர். தன்னலத்தை ஒதுக்கி மக்கள் நலனுக்காக எம்.ஜி.ஆர். பாடுபட்டதால்தான் மத்திய அரசு அவருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினை அளித்து கவுரவித்தது.
மக்களின் மனங்களில் இன்றளவிலும் குடிகொண்டு இருப்பவரும், கரை படியாத கரத்திற்கு சொந்தக்காரரும், மக்கள் நலத்திற்காக மகத்தான திட்டங்களைத் தீட்டியவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை குடும்பக் கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்த ஆ. ராசா இழிவுபடுத்தி பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு பேசியுள்ளது தி.மு.க.வுக்கும், ராசாவுக்கும் தான் இழுக்கே தவிர எம்.ஜி.ஆருக்கு அல்ல. இருப்பினும், இனி வருங்காலங்களில் நாவடக்கத்துடன் பேச ஆ. ராசா கற்றுக் கொள்ள வேண்டும்.
நாவடக்கம் இல்லாமல் பேசும் ராசாவுக்கு, 'நாவை அடக்காவிட்டால் சொற்குற்றம் ஏற்பட்டு துன்பப்பட நேரிடும்' என்ற வள்ளுவரின் வாக்கினை சுட்டிக்காட்டுவதோடு, வருகின்ற தேர்தலில் இதற்கான விளைவுகளை தி.மு.க.வும், ஆ. ராசாவும் சந்திக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.