3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்தது - விவசாயிகள் கவலை

3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-08-31 21:51 GMT

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை கை கொடுக்கவில்லை. இதனால் 3 மாநிலங்களில் உள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து குறைந்து போதுமான தண்ணீர் இல்லாத நிலை நீடித்து வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிக குறைவாக இருந்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அமைந்துள்ளது.

இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ந்தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அணையில் இருந்து தொடர்ந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், அணைக்கு நீர்வரத்து போதுமானதாக இல்லாததால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டு வருகிறது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 49.70 அடியாக குறைந்துள்ளது. இதனால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாகவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறையவில்லை. இந்த ஆண்டுதான் 50 அடிக்கு கீழ் குறைந்துள்ளது. அதாவது 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ந்தேதி அணையின் நீர்மட்டம் 48.92 அடியாக இருந்தது. ஆனால் அந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை காலதாமதமாக தொடங்கியதன் காரணமாக ஒரே மாதத்தில் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி நிரம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்