மேட்டூர் அணைநீர் கடைமடையை எட்டியது

மேட்டூர் அணைநீர் கடைமடையை எட்டியது

Update: 2022-06-13 20:15 GMT

சேதுபாவாசத்திரம்:

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியை மேட்டூர் அணைநீர் எட்டி உள்ளது. இந்த ஆண்டாவது முறை வைக்காமல் முழு கொள்ளளவு நீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கடைமடை பகுதி

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதி கடைமடை பகுதியாகும். இங்கு உள்ள பள்ளத்தூர், ஆண்டிக்காடு, இரண்டாம்புளிக்காடு, நாடியம், குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், துறையூர், மரக்காவலசை, உடையநாடு, வீரியங்கோட்டை, முடச்சிக்காடு, கழனிக்கோட்டை, வாத்தலைக்காடு, பூக்கொல்லை, ரெட்டவயல், கழனிவாசல், முதுகாடு, மணக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு போகம் சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணை நீர் முறைப்படி வந்தால் தான் இங்கு விவசாய பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள முடியும்.

முன்கூட்டியே அணை திறப்பு

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை சாகுபடி பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது கடந்த மாதம் (மே) 24-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

ஆடிப்பட்ட சாகுபடி

அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீரை கடந்த மாதம் 27-ந் தேதி திறந்து விட்டனர். இதனால் இந்த ஆண்டுதான் ஆடிப்பட்ட சாகுபடி கைகூடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆடிப்பட்ட சாகுபடி விவசாயிகளுக்கு நல்ல மகசூலை கொடுப்பதுடன் அறுவடை நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படாது. இந்த நிலையில் மேட்டூர் அணை நீர் நேற்று முன்தினம் நள்ளிரவு கடைமடை பகுதியான புதுப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் வாய்க்கால்களை எட்டியது.

முறை வைக்காமல்...

தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது.

இதனால் கடைமடை பகுதிக்கு ஆடிப்பட்டம் கைகூடும் வகையில் இந்த ஆண்டாவது முறை வைக்காமல் தண்ணீர் வழங்க வேண்டும் என கடைமடை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்