இந்த ஆண்டில், 2-வது முறையாக மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நிரம்பியது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர்,
மேட்டூர் அணை நிரம்பியது
கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. இதன் காரணமாக மே மாதத்தில் இருந்து இந்த இரு மாநிலங்களிலும் மழை தீவிரமடைந்தது.
இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகள் மே மாத இறுதியிலேயே தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பும் தருவாயில் இருந்தன. குறிப்பாக கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.
இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து ஜூன் மாதம் 16-ந் தேதி காலையில் அணை உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை எட்டி நிரம்பியது.
உபரிநீர் திறப்பு
அணை நிரம்பிய நிலையிலும் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. அதிகபட்சமாக அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டது.
ஜூன் மாதம் 16-ந் தேதி அணை நிரம்பிய நிலையில், தொடர்ந்து 70 நாட்களுக்கு நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. கடந்த மாதம் 23-ந் தேதி அணை நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் குறைய தொடங்கியது.
இவ்வாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கடந்த 10-ந் தேதி 118.71 அடியாக குறைந்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரம் அடைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் மீண்டும் உயரத்தொடங்கியது.
மீண்டும் நிரம்பியது
இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் காலை 119.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் மாலை 119.74 அடியாக உயர்ந்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி இந்த ஆண்டில் 2-வது முறையாக மீண்டும் நிரம்பியது.
மேட்டூர் அணை கட்டப்பட்டு 88 ஆண்டுகள் ஆன நிலையில், 42-வது ஆண்டாக இந்த ஆண்டில் இருமுறை நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. அணை நிரம்பிய நிலையில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதமும் கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது கடந்த மாதம் 19-ந் தேதி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று அணை மீண்டும் நிரம்பியதை அடுத்து நேற்று காலை 5.30 மணி அளவில் மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினரும் இணைந்து பொதுமக்களுக்கு வேண்டிய பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காவிரி கரையை ஒட்டிள்ள அண்ணாநகர், பெரியார் நகர் ஆகிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.