பாசி, உப்புத்தன்மையினால் வளர்ச்சி குன்றிய பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள்

சம்பா, தாளடி நெற்பயிரில் பாசி, உப்புத்தன்மையினால் வளர்ச்சி குன்றிய பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.;

Update:2023-10-18 00:15 IST

நெற்பயிரின் வளர்ச்சி குன்றி

நடப்பு சம்பா பருவத்தில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில் வட்டாரங்களில் உள்ள விவசாயிகளின் வயல்களில் ஆய்வு செய்ததில் ஒருசில வயல்களில் சுமார் 1 மாத வயதுடைய நெற்பயிரின் வளர்ச்சி குன்றியும், சில இடங்களில் நெற்பயிர்கள் காய்ந்த நிலையிலும் காணப்பட்டது. இந்த பகுதிகளில் தொடர்ந்து டி.ஏ.பி. உரத்தை அடி உரமாக பயன்படுத்துவதாலும், இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நெல் பயிரிடுவதாலும், ஆழ்துளை கிணறுகளின் மூலம் நீர்ப்பாய்ச்சுவதாலும் பாசிகளின் வளர்ச்சி அபரிமிதமாக பெருகி நெற்பயிரின் வளர்ச்சியை பாதிக்கின்றன.

மணிச்சத்து

பாசி படர்ந்துள்ள வயலில் நீர்பாசன வாய்மடையினை அடைத்துவிட்டு ஏக்கருக்கு 2 கிலோ நன்கு தூளாக்கப்பட்ட காப்பர் சல்பேட் உப்பை(மயில் துத்தம்), 20 கிலோ ஆற்று மணலுடன் கலந்து 1 அங்குலம் உயரத்திற்கு நீர் உள்ள நிலையில் சீராக தூவ வேண்டும். நீர் முழுமையாக வற்றி ஒரு சில சிறு வெடிப்புகள் உருவாகும் தருணத்தில் மீண்டும் நீர் பாய்ச்சுவதன் மூலம் இப்பாசிகளின் வளர்ச்சியை குறைக்க இயலும்.

பொதுவாக டெல்டா பகுதிகளில் மண்ணில் போதிய அளவு மணிச்சத்து இருக்கின்ற காரணத்தினால் மணிச்சத்தை கரைத்துக் கொடுக்க வல்ல பாஸ்போ பாக்டீரியா, துத்தநாகச்சத்தை கரைக்கும் தன்மையுள்ள கரைக்கும் பாக்டீரியா மற்றும் பொட்டாஷ்சத்தை கரைக்கும் தன்மையுள்ள பாக்டீரியா ஆகியவற்றை இட வேண்டும். கோனோவீடர் கருவி மூலம் பாத்திகளுக்கு இடையே தள்ளுவதால் பாசிகள் உடைபட்டு மண்ணோடு மக்கச் செய்வதால் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டு பாசியின் பாதிப்பு குறையும்.

பாதிப்புகள் குறையும்

மேலும் நெற்பயிர் சாகுபடிக்கு முன்பு பசுந்தாள் உரங்களான சணப்பு (அல்லது) தக்கைப்பூண்டு ஆகியவற்றை விதைத்து பூக்கும் தருவாயில் மடக்கி உழுது பின்பு நடவு செய்வதன் மூலம் பாசிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். மண்ணும் இயற்கையாகவே வளம் பெறும். மேலும், நெல் சாகுபடி செய்யும் வயல்களில் டி.ஏ.பி. உரங்களை தவிர்த்து அடி உரமாக 1 ஏக்கருக்கு 32 கிலோ யூரியா, 8 கிலோ பொட்டாஷ் உரங்களை இட்டு நடவு மேற்கொள்ள வேண்டும். மேலும், நடவு செய்த 25, 45 மற்றும் 65 முதல் 70 நாட்களில், ஒரு ஏக்கருக்கு 32 யூரியா, 8 கிலோ பொட்டாஷ் உரங்களை மேலுரமாக இட வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பாசிகளால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க இயலும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்