பணம் கொடுக்க மறுத்ததால் அரிவாளால் வெட்டப்பட்ட வியாபாரி சாவு

பணம் கொடுக்க மறுத்ததால் அரிவாளால் வெட்டப்பட்ட வியாபாரி பரிதாபமாக இறந்தார்

Update: 2022-06-12 18:10 GMT

தஞ்சாவூர்:-

தஞ்சை கரந்தையில், பணம் கொடுக்க மறுத்ததால் அரிவாளால் வெட்டப்பட்ட வியாபாரி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மளிகை கடை

தஞ்சையை அடுத்த கரந்தை ராஜாராமன் மடத்து தெருவை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 75). இவர், கரந்தை பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார்.

கடந்த 9-ந் தேதி இரவு இவர் கடையில் இருந்தபோது இவரது கடையின் அருகில் நின்று கொண்டு 2 வாலிபர்கள் சாலையில் செல்வோரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்க மறுத்தவர்களை தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களாலும் தாக்கினர். இதனால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அரிவாளால் வெட்டினர்

இதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் இருந்த கடைகளில் புகுந்தும் பணம் கேட்டு மிரட்டினர். அப்போது செந்தில்வேல் கடைக்கு சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினர்.

மேலும் அந்த வாலிபர்கள் அருகில் இருந்த மருந்து கடைக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியர் முருகானந்தத்தை வெட்டி கல்லாவில் இருந்த ரூ.2,500 பணத்தையும் எடுத்துச்சென்றனர்.மேலும் ஒரு வியாபாரியையும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கரந்தை ராஜாராமன் மடத்து தெருவை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் ஹரிகரன்(21), கரந்தை பூக்குளம் பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் தினேஷ்(19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்ப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

பரிதாப சாவு

பணம் கொடுக்க மறுத்ததால் அரிவாளால் வெட்டப்பட்ட மளிகை கடை வியாபாரி செந்தில்வேல் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை செந்தில்வேல் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

கொலை வழக்காக மாற்றம்

இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரையும் தஞ்சை மேற்கு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்