கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகள்
உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் திட்டத்தில் கட்டிட கழிவுகளை கையாளுவது மற்றும் அப்புறப்படுத்துவது குறித்து அதிகாரிகள் விளக்கினர்.;
உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் திட்டத்தில் கட்டிட கழிவுகளை கையாளுவது மற்றும் அப்புறப்படுத்துவது குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம்
தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் அனைத்து தரப்பு மக்கள் பங்களிப்புடன் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் கடந்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் உடுமலை நகராட்சியிலும் செயல்பாட்டில் உள்ளது.
இந்த திட்டத்தை 6 வகையான தலைப்புகளில் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமை நாட்களில் செயல்படுத்துவதற்கான செயல்பாட்டு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விளக்கக்கூட்டம்
அதன்படி நேற்று நீர் நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்தல், நீர் நிலைகளின் கரைப்பகுதி மற்றும் பொது இடங்களில் பெருமளவில் மரம் நடுதல் என்ற தலைப்பின் கீழ் நீர் நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நீர் நிலைகள் அருகே எந்த கட்டிடக்கழிவுகளையும் கொட்டாமல், அவற்றை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தின் விபரத்தை அறிவிப்பு பலகை மூலம் தெரியப்படுத்துதல், கட்டிடக்கழிவுகளை கையாளுவது மற்றும் அப்புறப்படுத்துவது ஆகியவை குறித்து பொதுமக்கள் குடியிருப்போர் நல சங்கத்தினர், தன்னார்வலர்கள், உள்ளாட்சியில் பதிவு பெற்ற கட்டிடப்பொறியாளர்கள் ஆகியோருக்கு, கட்டுமானம் மற்றும் கட்டிட இடிபாட்டு கழிவுகள் மேலாண்மை விதிகள் சம்பந்தமான விளக்கக்கூட்டம் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தின் போது இதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
மரம் நடுதல்
முன்னதாக முனீர் நகர் முதல் குட்செட் ரோடு வரை மற்றும் சிவசெல்லம்மாள் லே-அவுட் பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் நடந்தது. உடுமலை நகராட்சி, மழை உடுமலை அமைப்பு மற்றும் தன்னார்வ சேவை சங்கங்கள் ஆகியவற்றின் சார்பில் பழனியாண்டவர் நகர் முதல் குட்செட்ரோடு வரை, காந்திநகர், யு.கே.பி.நகர்பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகளை நகராட்சி தலைவர் மு.மத்தீன் தொடங்கிவைத்தார். நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன் முன்னிலை வகித்தார். நகராட்சி துணைத்தலைவர் சு.கலைராஜன், கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.