எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு: கூட்டணி குறித்து பேசப்பட்டதா..? ஜி.கே.வாசன் பதில்

சென்னை பசுமைவெளி சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை, ஜி.கே.வாசன் இன்று சந்தித்து பேசினார்.

Update: 2024-02-02 17:11 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்களின் சந்திப்பு கூட்டணிக்கான அச்சாரமாக மாறி வருகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை அங்கம் வகித்த பா.ஜனதா இந்த முறை அந்த கூட்டணியில் இல்லை. அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் தங்களது தலைமையில் தனி, தனி கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது.

அதேபோல், கடந்த முறை அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் இருந்த த.மா.கா. இந்த முறை யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை ஜி.கே.வாசன் வரவேற்றார். அதனால் அவர் பா.ஜனதா கூட்டணியை உறுதி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியது.

இந்த சூழ்நிலையில் அரசியலில் திடீர் திருப்பமாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவெளி சாலையில் உள்ள இல்லத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இணைகிறதா? என்ற கேள்வியும் எழுந்தது.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், "பா.ஜனதா, அ.தி.மு.க., பா.ம.க. என கட்சி தலைவர்களிடம் நாங்கள் நட்பு கட்சியாக தான் இருக்கிறோம். அந்த அடிப்படையில் தான் அவர்களை சந்தித்து பேசுகிறோம். தேர்தல், கூட்டணி என்பதை நானாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. எங்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தான் பேசி முடிவு எடுக்க முடியும். எனவே நட்பு ரீதியான சந்திப்பை திசை திருப்ப வேண்டாம். பா.ஜனதா, பா.ம.க. எல்லா தலைவர்களுடன் இதுபோன்று பேசி வருகிறோம், பேசுவோம். நட்பு ரீதியான சந்திப்புகள் தான்" என்று ஜி.கே.வாசன் கூறினார்.

முன்னதாக 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. த.மா.கா தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என கடந்த நவம்பர் மாதம் ஜி.கே வாசன் தெரிவித்திருந்தார். சமீபத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை ஜி.கே வாசன் விமான நிலையத்தில் சென்று வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்