திருச்செங்கோடு நகராட்சி கூட்டத்தில் காரசார வாதம் காலணியை வீச முயன்றதால் பரபரப்பு

திருச்செங்கோடு நகராட்சி கூட்டத்தில் காரசார வாதம் காலணியை வீச முயன்றதால் பரபரப்பு

Update: 2022-10-31 18:45 GMT

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு நகராட்சி கூட்டம் நேற்று நகராட்சி கூட்டரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு கூட்டத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து 13-வது வார்டு கவுன்சிலர் சினேகா எழுந்து தனது கணவர் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு காரணமானவர்களை ஒருமையில் பேசியதாகவும் தெரிகிறது.

அப்போது குறுக்கிட்ட ஆணையாளர் கணேசன், நகராட்சி கூட்டத்தில் கண்ணிய குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து பேசிய கவுன்சிலர் சினேகா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

அப்போது 23-வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி எழுந்து சினேகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கோபம் அடைந்த கவுன்சிலர் சினேகா நகராட்சி துணைத்தலைவர் கார்த்திகேயன் மீது காலணியை வீச முயன்றார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கூட்டம் முடிந்துவிட்டதாக கூறி தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் ஆணையாளர் கணேசன் ஆகியோர் தங்களது இருக்கைகளை விட்டு எழுந்து சென்றனர். ஆனால் இதன் பின்னரும் கவுன்சிலர்கள் இடையே காரசார வாதம் நீடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற திருச்செங்கோடு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த கவுன்சிலர்கள் அங்கிருந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்