கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்ட பெண் சுகாதார ஊழியர்கள் திரண்டதால் பரபரப்பு

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்ட பெண் சுகாதார ஊழியர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் மாத ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி கூடுதல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2022-05-23 17:04 GMT

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மக்களை தேடி மருத்துவம் பெண் சுகாதார தன்னார்வலர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்றனர்.

அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தி, முக்கிய நிர்வாகிகள் மட்டும் சென்று மனு அளிக்குமாறு தெரிவித்தனர். அதன்படி முக்கிய ஊழியர்கள் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் இருந்த கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மக்களை தேடி மருத்துவம்

தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்ட பணியில் கடலூர் மாவட் டத்தில் 409 பேர் பகுதி நேர பெண் சுகாதார தன்னார்வலர்களாக சேர்ந்து பணியாற்றி வருகிறோம்.

கடந்த 9 மாதங்களாக அனைத்து கிராமங்களிலும் தனியாக சென்று, மக்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் தொற்று நோய்களை கண்டறிந்து அவர்களின் இல்லத்திற்கே சென்று மருந்து, மாத்திரைகளை தங்கு தடையின்றி வழங்கி வருகிறோம்.நோயாளிகளுக்கு எந்நேரமும் அவசரம் கருதி நோய் தடுப்பு பணிகளை செய்து வருகிறோம்.

இது தவிர கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு பணியாற்றி வருகிறோம். தடுப்பூசி பதிவுகளை எங்கள் செல்போனில் பதிவு செய்கிறோம். ரத்த அழுத்த கருவி, செல்போன் ரீசார்ஜ், பேட்டரி, மருந்து பெட்டிகளை எடுத்துச்செல்ல வாடகை, பெட்ரோல் செலவு எங்கள் சொந்த பணத்தை செலவு செய்து வருகிறோம்.

ஊதியத்தை உயர்த்த வேண்டும்

ஆனால் எங்களுக்கு மாத ஊதியமாக ரூ.4500 மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் கடந்த மாத சம்பளம் இது வரை வழங்கவில்லை. இதர சலுகைகள் எதுவும் இல்லை. ஆகவே மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த எங்களுக்கு மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்