சேலம் அருகே பரிதாபம்:மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை
சேலம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பனமரத்துப்பட்டி:
மருத்துவ மாணவர்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருள்மணிகுமார். இவர், சொந்தமாக மருந்து கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் நிர்மல்குமார் (வயது 25). இவர், சேலம் அருகே தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் பிசியோதெரபி 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு அருகிலேயே வீடு எடுத்து தங்கி இருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிர்மல்குமார், பெற்றோரிடம் செல்போனில் பேசி உள்ளார். நேற்று நிர்மல்குமார் செல்போன் எண்ணுக்கு அவருடைய பெற்றோர் தொடர்பு கொண்ட போது நீண்டநேரம் ஆகியும் செல்போனை அவர் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் சந்தேகம் அடைந்த அருள்மணிகுமார், தன்னுடைய மகனின் நண்பர் ஜெயபிரகாசுக்கு போன் செய்து நிர்மல்குமாரை பார்க்க சொல்லி உள்ளார். நிர்மல்குமார் தங்கி இருந்த வீட்டுக்கு ஜெயபிரகாஷ் சென்றுள்ளார். அங்கு அவர், கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. அதாவது, வீட்டில் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நிர்மல்குமார் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ கல்லூரி மாணவர் தற்ெகாலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.