மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
நடுக்குப்பம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
ஆரணி
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.கே.தங்கமணி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதி துரை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நாகேஸ்வரி கோபி, பகுத்தறிவு, மாமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் வெ.திலகவதி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.
முகாமில் பொதுமக்கள் முன்னிலையில் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பாக நிதி சார் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மாற்றுத்திறனாளிகளுக்காக வங்கி கடன் வழங்குவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் கண், எலும்பு, பொது பிரிவு உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகளையும், பழைய அடையாள அட்டைகளை புதுப்பித்தும் வழங்கினார்.
இதில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.