தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய இலச்சினை மேயர் வசந்தகுமாரி வெளியிட்டார்
தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய இலச்சினைைய மேயர் வசந்தகுமாரி வெளியிட்டார்.;
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் பட்ஜெட்டை மேயர் வசந்தகுமாரி தாக்கல் செய்தார்.
முன்னதாக தாம்பரம் மாநகராட்சிக்கு என தனி இலச்சினை (லோகோ) உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த புதிய இலச்சினையை மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி அறிமுகம் செய்து, துணை மேயர் காமராஜ் மற்றும் கமிஷனர் அழகுமீனா முன்னிலையில் வெளியிட்டார்.
அப்போது துணை மேயர் காமராஜ், "விமான நிலையம், தாம்பரம் விமானப்படைத்தளம், மலைகள், நீர்நிலைகள், தொழில் நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனங்களை உள்ளடக்கி இந்த புதிய இலச்சினை உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
அதற்கு 4-வது மண்டல குழு தலைவர் காமராஜ், "இது தொடர்பாக ஆலோசனை செய்து முடிவு செய்யப்படவில்லை" என வாதம் செய்தார்.
அவரை தொடர்ந்து மேலும் சில கவுன்சிலர்களும், தாம்பரம் மாநகராட்சிக்கு உள்ளான பாரம்பரியத்தை கருத்தில் கொள்ளாமல் இலச்சினை உருவாக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினர்.
பின்னர் 2023-24-ம் ஆண்டுக்கான தாம்பரம் மாநகராட்சியின் முதல் பட்ஜெட்டை நிதி குழு தலைவர் ரமணி ஆதிமூலம் வாசித்தார்.
அதில் 2023- 2024-ம் ஆண்டுக்கான மொத்த வருவாய் ரூ.702.23 கோடியாகவும், செலவு ரூ.671.53 கோடியாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து, பட்ஜெட் குறித்து, திரையின் வாயிலாக கவுன்சிலர்களுக்கு விளக்கப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. குழு தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சேலையூர் சங்கர், "மாநகராட்சியில் பொதுமக்கள் வழங்கும் புகார்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வருகிறார்கள்" என்றார்.
மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி பேசும்போது, " தாம்பரம் மாநகராட்சியில் பம்மல் நகராட்சி இணைக்கப்படுவதற்கு முன்பு பணிகள் செய்த ஒப்பந்ததாரர்களுக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை. வெள்ள பாதிப்பு பணிகள் செய்தவர்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உரிய முறையில் பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.