மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய மேயர் இந்திராணி- ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஆசிரியை ஆனார்

மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, மேயர் இந்திராணி பாடம் நடத்தினார். ஆய்வுக்கு சென்ற இடத்தில் அவர் ஆசிரியையாக பணியாற்றினார்.

Update: 2023-10-18 00:53 GMT


ஆரம்பப்பள்ளி

மதுரை மாநகராட்சி மண்டலம்-2 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. அதில் மேயர் இந்திராணி, கமிஷனர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினர். இதைதொடர்ந்து மேயர், கே.கே.நகர் மெயின் சாலையில் நடந்து வரும் பாதாள சாக்கடை சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறு இன்றியும், பாதுகாப்பான முறையிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

அதன்பின் மேயர், மானகிரி மாநகராட்சி ஆரம்பபள்ளிக்கு ஆய்வு சென்றார். அப்போது மேயர், மாணவர்களிடம் முதல்-அமைச்சர் வழங்கும் காலை உணவு நன்றாக இருக்கிறதா, அதில் குறை ஏதும் இருக்கிறதா என கேட்டார். அதற்கு மாணவர்கள் நன்றாக இருப்பதாக பதில் அளித்தனர். அதன்பின் மேயர், திடீரென்று ஆசிரியராக மாறி மாணவ-மாணவிகளுக்கு பாடம் எடுக்க தொடங்கினார். அப்போது அவர் எழுத்துக்களை எப்படி வாசிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார். மாணவர்களும் மேயர் சொல்வதை திரும்பி வாசித்தனர். ஆய்வுக்கு சென்ற இடத்தில் மேயர் ஆசிரியர் பணி செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பின்னர் மேயர் பள்ளி வளாகம் முழுவதும் ஆய்வு செய்து பள்ளியை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஆசிரியர்

பின்னர் மேயர் இந்திராணி கூறியதாவது:-

மாநகராட்சி பள்ளிகளை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்றும், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தேவையானதை செய்து தர வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி மதுரை மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் 3 பள்ளிகளுக்கு நான் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறேன். அதே போல் கல்வித்துறை அதிகாரிகள் தினமும் 2 பள்ளிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளேன். அவர்களும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.20 கோடி செலவில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆரம்ப பள்ளி கல்விதான் ஒரு மாணவனுக்கு மிக முக்கியம். அந்த அடிப்படையில் அனைத்து மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும் மாணவர்களுக்கு வாசிப்பு திறன், கையெழுத்து ஆகியவை நன்றாக இருக்க வேண்டும் என கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதே போல் திருக்குறள் உள்பட தமிழ் நூல்களை அந்த மாணவர்கள் படிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்