அனைத்து சாலைப்பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும்

Update: 2023-08-18 17:21 GMT


திருப்பூர் மாநகராட்சியில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு அனைத்து சாலைப் பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்று 2-வது மண்டல சிறப்பு கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசினார்.

மண்டல கூட்டம்

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை, 4-வது குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு இடங்களில் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 2-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சாலை பணிகள் தொடர்பான சிறப்பு கூட்டம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் ந.தினேஷ்குமார் தலைமை தாங்கினார். துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர், மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கமிஷனர் முருகேசன் வரவேற்றார்.

சாலை பணிகளை நிறைவு செய்ய வேண்டும்

கூட்டத்தில் ஒருசில வார்டுகளில் பணிகள் தொடங்கப்பட்டு பாதியில் நிற்பதாகவும், சில இடங்களில் பணிகள் தொடங்கப்படாமலேயே இருப்பதாகவும் கவுன்சிலர்கள் தெரிவித்தனர். மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

தமிழகத்திலேயே திருப்பூர் மாநகராட்சிக்கு அதிக அளவிலான சாலை மேம்பாட்டு பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கி உள்ளார். 2-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலம் தொடங்கும் முன்பு அனைத்து சாலை பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சுமார் 1,400 இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண தனிக்குழு அமைக்கப்படும். முறைகேடான குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4-வது திட்ட குடிநீரை அனைத்து வார்டுகளுக்கும் வினியோகம் செய்வதற்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பி சோதனை ஓட்ட முயற்சி மேற்கொள்ளப்படும். பணிகளில் கவுன்சிலர்களும், அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மண்டல சிறப்பு கூட்டம் காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மேயர் தினேஷ்குமார் அலுவல் பணி காரணமாக 11.40 மணிக்கு வந்ததால் கூட்டம் 11.45 மணிக்குதான் தொடங்கியது. இதனால் கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர்.

மேலும் செய்திகள்