பெண் கழுத்தை அறுத்து படுகொலை
கிருஷ்ணகிரியில் பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
கிருஷ்ணகிரியில் பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெயிண்டர்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை எதிரே பூந்தோட்டம் ரெயில்வே காலனியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 40). பெயிண்டர். இவருக்கு கலா (34), லட்சுமி (30) ஆகிய 2 மனைவிகள். முதல் மனைவி கலாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட தகராறில் கலா கடந்த 6 ஆண்டுகளாக சுந்தரத்தை பிரிந்து பெங்களூருவில் உள்ள பெற்றோர் வீட்டில் மகன்களுடன் வசித்து வருகிறார். 2-வது மனைவி லட்சுமிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் லட்சுமி கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர்களது மூத்த மகன் லட்சுமியின் தாயார் வீட்டிலும், இளைய மகன் மாணவர் விடுதியிலும் தங்கி படித்து வருகின்றனர். லட்சுமியும், சுந்தரமும் மட்டுமே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
கழுத்தை அறுத்து கொலை
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலை லட்சுமியின் வீடு நீண்ட நேரமாக பூட்டி இருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது லட்சுமி ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது தெரிந்தது. இதுகுறித்து அவர்கள் கிருஷ்ணகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு, டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நேற்று முன்தினம் இரவு சுந்தரம் மது போதையில் வீட்டுக்கு வந்ததும், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
வலைவீச்சு
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம் என்பதால் யாரும் அதை பெரிதாக எடுத்து கொள்ளாததும், சுந்தரம் மனைவியை கழுத்தை அறுத்து கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லட்சுமி குடும்ப தகராறில் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவான சுந்தரத்தையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெண் கழுத்தை அறுத்து கணவரே படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.