மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக விழா

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக விழா கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-02 18:45 GMT


வடவள்ளி

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக விழா கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் நாளில் முருகப்பெருமானை வழிபட்டால் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்களின் துன்பம் விலகும் என்று புராணங்கள் கூறுகின்றன. எனவே வைகாசி மாதம் வரும் பவுர்ணமி தினத்தில் வரும் வைகாசி விசாகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிர மணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி நேற்று காலை 6 மணிக்கு மூலவருக்கு 16 வகையான வாசனை திரவியங்க ளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சுவாமி வீதி உலா

அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சி அளித்தார். மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 11 மணிக்கு வடவள்ளி ஊர் பொதுமக்கள் சார்பில் பால்குடம், பால்காவடி எடுத்து ஊர்வலமாக மருதமலைக்கு வந்தனர். அவர்கள் கொண்டு வந்த பால்குடம், பால்காவடிகள் மூலம் மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது.

மதியம் 12 மணிக்கு சுப்பிரமணியசுவாமி வள்ளி- தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் வீதிஉலா வந்தார். இதையொட்டி சிங்காநல்லூர் பக்தர்கள் சார்பில் ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடினார்கள்.

மாலையில் 6 மணி அளவில் முருகப்பெருமான் தங்க தேரில் எழுந்தருளினார். வைகாசி விசாக விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்