350 பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம்

350 பெண்களுக்கு ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் திருமண நிதி உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

Update: 2023-05-01 18:45 GMT

சிவகங்கை

350 பெண்களுக்கு ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் திருமண நிதி உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

தாலிக்கு தங்கம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நடைபெற்ற, திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சமூக நலஅலுவலர் அன்புகுளோரியா வரவேற்று பேசினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திருமண நிதி உதவி வழங்கி பேசியதாவது:-

பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து, தற்போது புதுமைப்பெண் என்ற திட்டத்தை அறிவித்து, அத்திட்டமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெண்கள் உயர்கல்வியை பெற வேண்டும் என்ற அடிப்படையில், தற்போது பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெண்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்கு அடிப்படையாக பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு, பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்து வருகிறது

குழந்தை திருமணங்கள் தடுக்கப்படும்

திருமண நிதி உதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் அடிப்படையில், பள்ளிக்கல்வியை பெண்கள் முடித்திருந்தால் 8 கிராம் தங்கத்துடன் ரூ.25,000 நிதி உதவியும் மற்றும் கல்லூரி படிப்பை முடித்திருந்தால் 8 கிராம் தங்கத்துடன் ரூ.50,000 நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் குழந்தை திருமணங்களும் தடுக்கப்பட அடிப்படையாக அமைகிறது என்றார்.

பின்னர் 350 பெண்களுக்கு ரூ.1 கோடியே 57 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பணிநியமன ஆணை

தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில், நெல் கொள்முதலுக்காக தேர்வு செய்யபட்ட பருவகால பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நடைபெற்றது. விழாவில் சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், நெல் கொள்முதலுக்கான 61 பருவகால பட்டியல் எழுத்தர்கள், 53 பருவகால உதவுபவர்கள் மற்றும் 58 பருவகால காவலர்கள் என மொத்தம் 172 பருவகால பணியாளா்களுக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். இதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருண் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்