ரூ.20 கோடியில் புதிதாக கட்டப்பட்ட காமராஜர் காய்கனி மார்க்கெட் திறப்பு

தஞ்சையில் ரூ.20 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட காமராஜர் காய்கனி மார்க்கெட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை எம்.எல்.ஏ.க்கள், மேயர் வழங்கினர்.;

Update:2022-11-23 01:20 IST

தஞ்சையில் ரூ.20 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட காமராஜர் காய்கனி மார்க்கெட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை எம்.எல்.ஏ.க்கள், மேயர் வழங்கினர்.

காமராஜர் மார்க்கெட்

தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கனி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட் இருந்த கட்டிடங்களை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக முதலில் ரூ.17 கோடியே 76 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் மேலும் ரூ.2 கோடியே 50 லட்சம் என மொத்தம் 20 கோடியே 26 லட்சம்செலவில் மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டது.

அதன்படி 4.1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 303 கடைகள் கட்டப்பட்டன. இது தவிர குடிநீர் வசதி, ஏ.டி.எம். மையம், சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா, நிர்வாக அறை, தீயணைப்பு வசதி, ஜெனரேட்டர் வசதி, கழிவறை வசதி, கழிவுநீர் செல்லும் வசதி ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் 77 வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், நான்கு சக்கர வாகனங்கள் 219 வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் இந்த மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது.

ஸ்கேட்டிங் மைதானம்

இதே போல் தஞ்சை பி.ஏ.ஓய். நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் ரூ.1 கோடியே 95 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த உள் விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், மைதானத்தை சுற்றிலும் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

காமராஜர் மார்க்கெட் மற்றும் ஸ்கேட்டிங் மைதானம் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து தஞ்சையில் பொதுமக்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணைமேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மண்டலக்குழு தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, ரம்யாசரவணன் ஆகியோர் இனிப்புகளை வழங்கினர்.

விரைவில் பயன்பாட்டுக்கு வரும்

இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ், அறச்செல்வி, காமராஜர் காய்கனி வர்த்தக சங்க தலைவர் தர்மராஜ், செயலாளர்கள் கார்த்தி, சுந்தர், துரை, பொருளாளர் சிதம்பரம் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காமராஜர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளதால், விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்