மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா

Update: 2023-04-05 17:27 GMT


சேவூர் சந்தைப்பாளையம் மாரியம்மன்கோவிலில் பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாரியம்மன் கோவில்

அவினாசியை அடுத்து சேவூர் ஊராட்சி சந்தையப்பாளையம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டும் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 28 -ந்தேதி கம்பம் நடுதல் மற்றும் பூச்சாட்டுடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி காலை, இரவு நேரங்களில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், அதை தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனைகளும் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதைதொடர்ந்து தினசரி இரவு பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவிளக்கு-பூவோடு

முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 5 மணிக்கு அம்மை அழைத்தல், காலை 6 மணிக்கு பெண்கள் அனைவரும் சந்தையப்பாளையம் பொது இடத்தில் ஒன்று சேர்ந்து மாவிளக்கு எடுத்து வந்து மாரியம்மனை வழிபட்டனர். இதையடுத்து, காலை 9 மணிக்கு பூவோடு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இரவு 7 மணிக்கு கம்பம் களைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், நீர்மோர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு மஞ்சள் நிராடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.திருவிழா நிகழ்ச்சிகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்