சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தேரோட்டம்
சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது.;
சிதம்பரம்,
கீழத்தெரு மாரியம்மன்
சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி மாத தீமிதி திருவிழா கடந்த மாதம் 22-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை மாரியம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் மாவிளக்கு போட்டும், அங்க பிரதட்சணம் செய்தும் அம்மனை வழிபட்டனர். தொடா்ந்து மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.
தேரோட்டம்
அதன் பிறகு தேரோட்டம் நடந்தது. தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. முன்னதாக கீழ வீதியில் தேர் வந்தபோது நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் மண்டகப்படி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று (திங்கட்கிழமை) மாலை கோவில் வளாகத்தில் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.