காலநிலை மாற்ற விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அக்டோபர் 9-ஆம் தேதி மாரத்தான் ஓட்டம் - அன்புமணி ராமதாஸ்

சென்னையில் வரும் 9-ஆம் தேதி அன்புமணி ராமதாஸ் தலைமையில் காலநிலை மாற்ற விளைவுகள் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது.

Update: 2022-10-06 06:45 GMT

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா போன்ற பெருந்தொற்றுகளுக்கும், இயான் புயல் போன்ற பேரிடர்களுக்கும் அடிப்படைக் காரணம் காலநிலை மாற்றமும், அதன் விளைவான புவி வெப்பமயமாதலும் தான். இந்த ஆபத்துகளும், அச்சுறுத்தல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ளாததும், அதுகுறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படுத்தப்படாததும் வருத்தம் அளிக்கிறது.

இந்தியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் இப்போது எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மிக முக்கிய ஆபத்து காலநிலை மாற்றம் தான். அதனால் 2050-ம் ஆண்டுக்குள் புவிவெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்; அதனால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆபத்து இப்போது இன்னும் வேகமாக நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது. புவிவெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ள நிலையில், இதுவே உலகம் முழுவதும் பல்வேறு பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்கான உதாரணங்களில் ஒன்று தான் அமெரிக்காவை தாக்கிய இயான் சூறாவளி ஆகும்.

அமெரிக்கா மட்டுமின்றி, கியூபா, கேமன் தீவுகளில் 116 பேரை பலிவாங்கிய இயான் புயல், மொத்தம் ரூ. 8 லட்சம் கோடி அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் இத்தகைய பேரழிவுகள் இன்னும் அதிகமாகவும், இன்னும் தீவிரமாகவும் ஏற்படும் என்று வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை 2100-ஆம் ஆண்டுக்குள் சென்னை மாநகரின் மொத்தப் பரப்பளவில் 16%, அதாவது 67 சதுர கிலோ மீட்டர் கடலில் மூழ்கிவிடும்; அடுத்த 5 ஆண்டுகளில் கடல் மட்டம் 7 செ.மீ உயரக்கூடும். அவ்வாறு உயர்ந்தால் கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகள் கடலில் மூழ்கக் கூடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

உலகம் முழுவதும் வெளியாகும் கரியமில வாயுவின் அளவை 10 லட்சத்தில் 415 பங்கு என்பதிலிருந்து 350 பங்காகக் கட்டுப்படுத்தாவிட்டால் இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகள் அழிவை நோக்கி செல்வதைத் தடுக்க முடியாது. காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் பற்றி ஒவ்வொரு நாளும் வெளியாகி வரும் புதிய தகவல்கள் பதைபதைக்க வைக்கின்றன. பேரழிவுகள் மட்டுமின்றி, உணவுக்கும், தண்ணீருக்கும் கூட பஞ்சம் ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது. இவற்றைத் தடுப்பதற்கான ஒரே வழி காலநிலை மாற்ற அவசர நிலையை பிரகடனம் செய்து, அதன் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வகுத்து அதை முழு வீச்சில் செயல்படுத்துவது மட்டும் தான்.

காலநிலை மாற்ற அவசர நிலையை அறிவிக்க வேண்டும்; காலநிலை மாற்ற செயல்திட்டத்தை தயாரித்து செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் அமைப்பும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. தமிழ்நாட்டிற்கான மாநில காலநிலை மாற்ற செயல்திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்பின் ஓராண்டாகியும் அளவிடக்கூடிய வகையில், மாநில அளவிலான செயல்திட்டத்தின் எந்த அம்சமும் செயல்படுத்தப்படவில்லை. சென்னை மாநகராட்சி காலநிலை மாற்ற வரைவு செயல்திட்டம் முழுமையானதாக இல்லை. அதன் தமிழ் வடிவத்தை வெளியிடச் செய்வதற்கு பா.ம.க.வும், பசுமைத் தாயகம் அமைப்பும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியிருந்தது.

காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை. இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்; தமிழ்நாடு சட்டப்பேரவையும், அனைத்து நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளும், பொது அமைப்புகளும், பெரு நிறுவனங்களும் காலநிலை மாற்ற அவசர நிலையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்; புவிவெப்பமடைதலை தடுக்கவும், சமாளிக்கவுமான திட்டங்களை உள்ளடக்கிய காலநிலை செயல் திட்டத்தை ஒவ்வொரு மட்டத்திலும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் வரும் 9-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை காலநிலை மாற்ற நடவடிக்கைக்கான சென்னை ஓட்டம் (Chennai Run For Climate Action Plan) என்ற தலைப்பில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த ஓட்டத்திற்கு நான் தலைமையேற்கவிருக்கிறேன்.

தமிழ்நாட்டை காக்க வேண்டும்; இந்தியாவை காக்க வேண்டும்; உலகை காக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த மாரத்தான் ஓட்டத்தில் ( Chennai Run) பூவுலகை காக்க விரும்பும் சூழலியல் ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்