நாமக்கல்லில் மாரத்தான் போட்டி

அண்ணா பிறந்தநாளையொட்டி நாமக்கல்லில் நடந்த மாரத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.;

Update:2023-10-09 00:15 IST

மாரத்தான் போட்டி

தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நாமக்கல்லில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தனித்தனியாக இருவேறு வயது பிரிவுகளின் கீழ் மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து மாரத்தான் போட்டியை சின்ராஜ் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில், கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.

பரிசு

ஆண்களில் 17 முதல் 25 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 8 கி. மீட்டர் தொலைவிற்கும், 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 10 கி.மீட்டர் தொலைவிற்கும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. அதேபோல் பெண்களுக்கு 17 முதல் 25 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 5 கி. மீட்டர் தொலைவிற்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகைகளை கலெக்டர் உமா வழங்கினார். முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அதேபோல் 4 முதல் 10-ம் இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.1,000 பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கோகிலா, உடற்கல்வி பயிற்றுனர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்