வனக்காவலர் வீட்டுக்குள் புகுந்து மாவோயிஸ்டுகள் மிரட்டல்

தமிழக-கேரள எல்லையில் வனக்காவலர் வீட்டுக்குள் புகுந்து பெண்கள் உள்பட மாவோயிஸ்டுகள் துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து துண்டு பிரசுரங்களை ஒட்டி சென்றனர். இதனால் பதற்றம் நிலவி வருகிறது.

Update: 2023-03-15 18:45 GMT

கூடலூர், 

தமிழக-கேரள எல்லையில் வனக்காவலர் வீட்டுக்குள் புகுந்து பெண்கள் உள்பட மாவோயிஸ்டுகள் துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து துண்டு பிரசுரங்களை ஒட்டி சென்றனர். இதனால் பதற்றம் நிலவி வருகிறது.

துப்பாக்கி முனையில்...

கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு, கண்ணனூர், பாலக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து கேரளா தண்டர் போல்ட் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வனப்பகுதியில் தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்தநிலையில் மாவோயிஸ்டுகளின் முக்கிய படைத்தளபதிகள் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு வந்தது. கடந்த வாரம் வயநாடு மாவட்டம் படிஞ்சாதரா பகுதியில் 2 மாவோயிஸ்டுகள் ஆதிவாசி பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.

மாவோயிஸ்டுகள் மிரட்டல்

இந்தநிலையில் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே தொண்டர்நாடு அரிபுழா பகுதியை சேர்ந்த வனக்காவலர் சசி என்பவரது வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு துப்பாக்கிகளுடன் பெண்கள் உள்பட 4 மாவோயிஸ்டுகள் புகுந்தனர். தொடர்ந்து நாங்கள் மாவோயிஸ்டுகள் என்று கூறி, தங்களது கொள்கைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.இதனால் சசி மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சமடைந்தனர்.

பின்னர் வனக்காவலர் சசியின் செல்போனை பறித்த மாவோயிஸ்டுகள், துண்டு பிரசுரங்களை புகைப்படம் எடுத்து அதிலிருந்த வாட்ஸ் அப் குரூப்களுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கக்கூடாது என மிரட்டினர். பின்னர் அப்பகுதியில் துண்டு பிரசுரங்களை ஒட்டினர். அதில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் முறைகேடு நடப்பதால் நியாயமாக அரசுத்துறைகளில் வேலை வழங்குவதில்லை. அரசு ஊழியர் குடும்பத்தினரின் குழந்தைகள் மட்டுமே அரசு ஊழியர்களாக வருகின்றனர். ஆதிவாசி மக்களை ஏமாற்றக்கூடாது. இதனால் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

அடையாளம் தெரிந்தது

சுமார் 2 மணி நேரம் அங்கிருந்த மாவோயிஸ்டுகள், அதன் பின்னர் தப்பி சென்றனர். இதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து புகைப்படங்களை காண்பித்து சசி குடும்பத்தினரிடம் விசாரித்தனர். அப்போது தலைமறைவாக உள்ள பெண் மாவோயிஸ்டுகள் சுந்தரி, உன்னி மாயா மற்றும் சந்துரு ஆகியோர் என அடையாளம் தெரிந்தது. மற்றொருவர் துணியால் முகத்தை முழுவதுமாக மறைத்து இருந்ததால் அடையாளம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து மானந்தவாடி போலீசார் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதனால் பதற்றம் நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்