கோவில் உண்டியலில் மனுபோட்டு இந்து முன்னணியினர் நூதன போராட்டம்
தென்காசியில் கோவில் உண்டியலில் மனுபோட்டு இந்து முன்னணியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் ஒரு பெரிய விநாயகர் சிலை ஆண்டுதோறும் வைக்கப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்திக்கு 3 நாட்களுக்கு முன்பே இந்த சிலை வைக்கப்படும். இதற்காக கோவில் முன்பு பந்தல் போடப்பட்டது. போலீசாரிடம் இதற்கு அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாளில் தான் வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். இதைத்தொடர்ந்து கோவில் முன்பு பந்தல் போடப்பட்ட இடத்தில் அதனை மறைக்கும் அளவிலும், யாரும் அங்கு செல்லாத வகையிலும் போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டு பாதுகாப்பும் போடப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து முன்னணியினர் நேற்று மாலை மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து தலைமையில் விநாயகர் முகமூடி அணிந்து காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலுக்கு வந்து அங்குள்ள உண்டியலில் மனுவை போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த மனுவில், விநாயகர் தனது தந்தையான சிவபெருமானிடம் தனது பிறந்த நாளை கொண்டாட இந்த அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும், அரசுக்கு இதற்கு அனுமதி அளிக்க ஆசி புரிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் நேற்று ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. அதனை வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் அகற்றினர்.