ஜல்லிப்பட்டியில் பொது வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2023-01-13 17:12 GMT


ஜல்லிப்பட்டி பகுதியில் பொது வண்டிப்பாதை தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அதனை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுடன் இணைந்து நேற்று ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உடுமலை தாலுகா செயலாளர் சவுந்திரராஜன் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

உடுமலை தாலுகா ஜல்லிப்பட்டி வெங்கிட்டாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி வரும் பொது வண்டிப்பாதை கோவிந்தாபுரம் முதல் மேற்குத்தொடர்ச்சி மலை வரை செல்லும் வகையில் உள்ளது. மேலும் இந்த பகுதியில் புறம்போக்கு நிலம் மற்றும் சீதாமடை குட்டை ஆகியவை உள்ளது. இந்த பகுதிகளை தனிநபர்கள் ஆக்கிரமித்து முள் கம்பி வேலி அமைத்துள்ளனர்.மேலும் முள் கம்பி வேலியில் சட்ட விரோதமாக மின்சார இணைப்பும் கொடுத்துள்ளனர். இதனால் பொது வண்டிப்பாதையை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் இடுபொருட்கள் மற்றும் விளைபொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு பொது வண்டிப்பாதை தடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்