சிராவயல் மஞ்சுவிரட்டுக்கு தயாராகும் திடல்

சிராவயல் மஞ்சுவிரட்டுக்கு திடல் தயாராகி வருகிறது

Update: 2023-01-09 18:45 GMT

திருப்பத்தூர், 

பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பத்தூர் அருகே சிராவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்காக திடல் தயாராகும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்கு தடுப்பு வேலிகள் அமைத்து, வாடிவாசல் சீரமைப்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிராவயல் மஞ்சுவிரட்டு

பொங்கல் பண்டிகையின் போது தென் மாவட்டங்களான மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அடுத்தப்படியாக புகழ்பெற்ற மஞ்சுவிரட்டு போட்டியாக திருப்பத்தூர் அருகே சிராவயலில் மாட்டுப்பொங்கல் தினத்திற்கு மறுநாள் நடக்கும் மஞ்சுவிரட்டு மிகவும் புகழ் பெற்றதாகும்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்திலேயே மஞ்சுவிரட்டை நடத்திய ஊர் சிராவயல் என்பதால் இங்கு நடைபெறும் மஞ்சுவிரட்டை பார்க்க ஏராளமானோர் வருவார்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மஞ்சுவிரட்டு வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

 திடல் தயாராகும் பணிகள் மும்முரம்

இதற்காக தற்போது ஊர் அம்பலக்காரர் வேலுச்சாமி அம்பலம் தலைமையில் மஞ்சுவிரட்டு திடல் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள வாடிவாசல், வாடிவாசலில் இருந்து காளைகள் வெளியேறும் பகுதி, பார்வையாளர்கள் பகுதி, முக்கிய பிரமுகர்கள் அமரும் பகுதி, மருத்துவ பணியாளர்கள் பகுதி உள்ளிட்ட பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுதவிர காளைகளை கொண்டு வந்து அங்கு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் பகுதி, வாடிவாசலில் காளைகள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பகுதிகளும் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் பாதை, கார் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பகுதிகளும் தயார்படுத்தும் பணி நடைபெற்றுள்ளது. தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்னும் சில தினங்களில் பணிகள் முழுமை அடையும் நிலையில் உள்ளது. சிராவயல் மஞ்சுவிரட்டு திடல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்